Tamil Full Movie




கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை: நடிகர் விக்ரம்


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-2013 சர்வதேச கலாசார மற்றும் விளையாட்டு விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் 380 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள், விஐடி மாணவர்கள் 10600 பேர் உள்பட மொத்தம் 18 ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர்.                                              

இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த ரிவேரா கலை விழாவுக்காக கடந்த 3 மாதங்களாக மாணவர்கள் அதிகமாக கஷ்டப்பட்டு இனிமையான நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த மாதிரி விழாவை வேறு எங்கும் பார்க்க முடியாது.

இந்த விழாவில் விளையாட்டு, கலை மட்டுமல்லாமல் கல்வி சம்பந்தமாகவும், மாணவர்களுக்கு பயனுள்ள தாகவும் அமைந்தது. இந்தியாவில் முதல் தரமான பல்கலைக்கழகமாக நாம் வந்து கொண்டு இருக்கிறோம். உலகில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் இருந்து எந்த பல்கலைக்கழகமும் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் உலகளவில் தரமான உயர்கல்வி நிறுவன மாக விஐடி உருவாகும். நாங்கள் அதற்கான இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அந்த சாதனையை கண்டிப்பாக நாங்கள் அடைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் விஐடிக்கு வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி நடந்தது. தற்போது மனைவியின் வற்புறுத்தலால் வந்தேன். இங்கு வந்தபிறகு தான் மிஸ் பண்ணிவிட்டோம் என்று தெரிகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள். படிப்புக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பது பெருமையாக உள்ளது.

அதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விக்கு விக்ரம் பதில் அளித்தார்.

கேள்வி: உங்கள் கல்லூரி வாழ்க்கை எப்படி?

விக்ரம்: சுத்த போர். பள்ளியில் படிக்கும்போது என்னை ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர். கோ- எஜூகேஷனில் சேர்க்க சொன்னேன். கல்லூரியில் லயோலா கல்லூரியில் சேர்த்தனர். அங்கும் பெண்கள் இல்லை.

கேள்வி: உங்களுக்கு பெண் தோழிகள் உண்டா?

விக்ரம்:அதை சொன்னால் பிரச்சினை ஏற்படும். இங்கு எனது உறவினர் ஒருவர் படித்து வருகிறார். அவர் எனது மனைவியிடம் கூறிவிடுவார். நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியை ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் வேறு ஒருவரை மணந்து கொண்டார்.

கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகை?

விக்ரம்: எந்த நடிகை என்று கூறினால் பிரச்சினையாகிவிடும் திரிஷாவை உங்களுக்கு பிடிக்குமா?… சரி (மாணவரை பார்த்து) உங்களுக்கு யாரை பிடிக்கும்?

மாணவர்: நமீதா.

விக்ரம்: எனக்கு நமீதாவை பிடிக்கும். அவர் என்னை கோஹினூர் வைரம் என்று கூறியுள்ளார்.

கேள்வி: எந்த கதாநாயகனுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

விக்ரம்: நான் டபுள் ஆக்ஷன் ஹீரோவாகவும், எனது மகனுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆசை. அப்பாடா… எப்படி தப்பிச்சுட்டேனா?… கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை.

பின்னர் விக்ரம் சினிமா வசனம், பாட்டு பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத், துணை வேந்தர் ராஜூ, இணை துணைவேந்தர் நாராயணன் ரிவேரா ஒருங்கிணைப்பு குழு மாணவ, மாணவிகள் பேசினார்கள்.

விளையாட்டு போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை விஐடி பல்கலைக்கழகமும், கலாசார போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகமும் பெற்றது. அவர்களுக்கு விக்ரம் பரிசுகள் வழங்கினார்.




Pair of Vintage Old School Fru