XtGem Forum catalog
Tamil Full Movie




மும்பையில் நண்பர்களான கேகே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள். மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கேகே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கேகே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.

மனமுடைந்த பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் இவரது மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார். அவரிடம் நடந்ததை விவரிக்கிறார்.

உடனே, புதிய நடனப்பள்ளி தொடங்க பிரபுதேவாவுக்கு கணேஷ் ஆச்சர்யா ஆலோசனை கூறுகிறார். மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் முடிவை கைவிடுமாறு ஆச்சர்யா பிரபுதேவாவிடம் கூறுகிறார். தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை துவங்குகிறார்கள்.

அதன்படி, கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா. இதற்காக அவர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.

இந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

நடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார். ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.

குறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் சோலோ நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது. பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. கெட்ட நண்பராக வரும் கேகே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக செய்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில், நடனப்போட்டியில் தனது குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம். இதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து, ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.

சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.

மொத்தத்தில் ‘ஏபிசிடி’ பார்க்கணும் பாய்ஸ்.