Old school Easter eggs.
Tamil Full Movie




சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை சித்தரிக்கும் கதை…

வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் காட்டுக்குள் யானைகளை கொன்று தந்தங்களை கடத்துகின்றனர். பின்னர் சந்தன மரங்களை வெட்டுகிறார்கள். வனத்துறையினர் வீரப்பனை பிடிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சாதுர்யமாக தப்புகிறான்.

இதனால் போலீசுக்கும் வீரப்பனுக்கும் மோதல் வலுக்கிறது. வீரப்பன் போலீஸ் நிலையங்களை தாக்கி அழிக்கிறான். கண்ணிவெடி பதுக்கி போலீஸ் வாகனங்களை தகர்க்கிறான். கன்னட நடிகர் ராஜ்குமாரையும் கடத்துகிறான்.

அவன் அடாவடித்தனம் எல்லை மீற அதிரடிப்படை போலீஸ் அதிகாரி அர்ஜுன் களம் இறங்குகிறார். வீரப்பனை வேட்டையாட வியூகம் வகுக்கிறார். அவர் பிடியில் வீரப்பன் எப்படி சிக்குகிறான் என்பது மீதி கதை.

வீரப்பன் கேரக்டரில் கிஷோர் மிரட்டுகிறார். சமாதானம் பேசவரும் வன அதிகாரியை கொன்று தலையை சூலாயுதத்தில் குத்தி வைப்பது குரூரம். கூட்டாளிகளை பிடித்த போலீஸ்காரர்களை போலீஸ் நிலையத்தில் புகுந்து சுட்டுத் தள்ளுவது பயங்கரம்.

ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்ந்தாலும் அர்ஜுன் வருகைக்கு பின் விறுவிறுப்புக்கு மாறுகிறது. மிலிட்டரி பெரியவராக வந்து வீரப்பனுக்கு உதவும் ஆடுகளம் ஜெயபாலனை பிடித்து வீரப்பன் நடமாட்டங்களை அறிவது அவர் மூலமாகவே வீரப்பனை காட்டில் இருந்து வெளியே வர வைத்து தீர்த்துகட்ட வியூகம் அமைப்பது. அடுத்து என்ன என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.

வீரப்பன் கதை முடியும் அந்த கடைசி சில நிமிடங்கள் படத்தோடு கட்டிப் போடுகின்றன. போலீஸ் அதிகாரி கெட்டப்பில் அர்ஜுன் கம்பீரம். வீரப்பனுக்கு பொறி வைக்க துப்புதுலக்கும் பாணி ஈர்க்கின்றன.

லட்சுமிராய் நிருபராக வருகிறார். வீரப்பன் அண்ணனாக வரும் அருள்மணி, சேத்துக்குளி கோவிந்தனாக வரும் சம்பத் முறுக்கு மீசையில் பயம் காட்டுகின்றனர்.

வீரப்பனின் நிஜ கதையை திரையில் விறுவிறுப்பாக காட்சிபடுத்தி உள்ளார். இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ். கோர்ட்டு சர்ச்சைகளால் சில சீன்கள் துண்டிக்கப்பட்டு குழப்புகிறது. அதையும் மீறி வீரப்பனின் மர்மம் நிறைந்த வாழ்க்கை திகிலிலுட்டுகிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலம்.

மொத்தத்தில் ‘வனயுத்தம்’ மிரட்டல்.