XtGem Forum catalog
Tamil Full Movie




ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமான ரஜினியின் கோச்சடையான் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ள படம் கோச்சடையான். அவதார் படம் போல, 3 டியில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பத்தில் வரும் முதல் படம் இது. 3டி வசதி இல்லாத அரங்குகளுக்காக 2டியிலும் இந்தப் படம் வருகிறது. லண்டன், கேரளா மற்றும் சென்னை ஸ்டுடியோக்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் படம் வெளியாகும் தேதி குறித்து உறுதியாக எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மேலும் இந்தப் படம் தொடர்பாக இதுவரை இரண்டு ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மற்றதெல்லாம் பிரஸ்மீட் ஸ்டில்கள்தான். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான் மற்றும் தெலுங்கில் வெளியாகும் கோச்சடையான், வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “படத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் கணிசமாக நேரம் எடுக்கின்றன.

தி அவெஞ்சர்ஸ் படத்துக்கு 3 டி மற்றும் அதற்கான ஸ்டீரியோ டி ஒலி தொழில் நுட்பத்தைக் கொடுத்த ஹாலிவுட் குழுவினர் இந்தியா வந்து கோச்சடையானுக்கு, அதே தொழில்நுட்பங்களைச் செய்து வருகின்றனர். தாமதத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னைப் பற்றியோ தன் படங்கள் பற்றியோ பெரிதாக புகழ மாட்டார். அடுத்தவர்கள் சொன்னாலும் அமைதியாக இருந்துவிடுவார்.

ஆனால் அவரே படத்தைப் பார்த்து வியந்தார். இயக்குநர் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார். இந்தப் படம் திரைக்கு வரும்போது, இன்னும் மேம்பட்ட வடிவில் இருக்கும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன. ரஜினி சார் சாதாரண ஹீரோ அல்ல. இந்திய சினிமாவில் வேறு எவர் படங்களுக்கும் இல்லாத முக்கியத்துவம் அவரது படங்களுக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் விட முக்கியம், ரஜினி சார் உடல்நிலை சரியான பிறகு வரும் முதல் படம் கோச்சடையான்தான்.

எனவே அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எப்படி இருக்கும் என்பது புரிந்து, அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி. இந்தப் படத்துக்கு அதைவிட அதிகம் செலவு செய்தாலும் நியாயம்தான். ஜப்பானில் ரிலீஸ் செய்யும் உரிமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் இந்தப் படத்துக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றார்.

பட வெளியீட்டுத் தேதி குறித்துப் பேசியுள்ள முரளி மனோகர், “ஜூலை மாதம் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம். ஏப்ரலுக்குள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துவிடும். இதுகுறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஸ்டுடியோ டி நிறுவனத்திடமே விட்டுவிட்டோம் (போஸ்ட் புரொடக்ஷன் பொறுப்பேற்றுள்ள நிறுவனம்). படத்தின் நீளம் 2 மணி 5 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும்,” என்றார். இத்தாலிய, ப்ரெஞ்ச் மொழிகளிலும் கோச்சடையான் வெளியாகப் போகிறது.