திருமலை: நடிகைகள் ஸ்ரேயாவும், ரிச்சாவும் திருப்பதி கோவிலில் ஒரே நாளில் சாமி கும்பிட வந்தததால், உற்சாகமான ரசிகர்கள், அவர்களை முற்றுகையிட்டு தங்கள் 'பக்தியை' வெளிப்படுத்தினர்.
ஸ்ரேயா அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மொய்த்தனர்.
அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். ஆனால் ஸ்ரேயா யாருக்கும் ஆட்டோகிராப் போடவில்லை. நான் இங்கு சாமி கும்பிட வந்துள்ளேன்.. நீங்களும் போய் சாமி கும்பிடுங்க என்று கடுப்பாகக் கூறிவிட்டு, வேமாக காருக்குள் சென்று விட்டார்.
பின்னர் ரசிகர்களுக்கு நிகராக முண்டியடித்து வந்த நிருபர்களிடம் கூறுகையில், "திருப்பதி வெங்கடாஜலபதி எனக்கு பிடித்தமான கடவுள். ஆண்டுக்கு நான்கு தடவை இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இதுதவிர என் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதிக்கு வருவேன்.
இந்த முறை தமிழ், கன்னட மொழிகளில் தயாரான சந்திரா படத்தில் நடித்துள்ளேன். இது விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்காகவே சாமி கும்பிட வந்தேன். இந்த இடத்தில் மன அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்," என்றார்.
அடுத்து ரிச்சா...
ஸ்ரேயா நகர்ந்த கையோடு ரிச்சா கங்கோபாத்யா வந்துவிட்டார். டபுள் தமாகா எனும் அளவுக்கு ஏக குஷியாகிவிட்டனர் ரசிகர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் அவரால் கோயில் படியிறங்கக் கூட முடியவில்லை. பின்னர் போலீஸ் துணையுடன் அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார்.
கோயிலுக்குப் போனால் வெளியே வராமலா போய்விடுவார் என்று வெளியில் ஏராளமானோர் காத்திருந்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரிச்சாவை அனைவரும் மொய்த்துக் கொண்டனர். ஒரு அடி கூட நகரவிடவில்லை. மீண்டும் போலீஸார் துணைக்கு வந்தனர். ரசிகர்களை தெலுங்கில் திட்டி அப்புறப்படுத்தினர்.