Tamil Full Movie




நடிப்பு: விஷால், திரிஷா, சுனைனா, இசை: யுவன்ஷங்கர்ராஜா, இயக்கம்: திரு, வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டிங்: ரூபன் தயாரிப்பு: ஜெயபாலாஜி ரியல் மீடியா பி.லிட். விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்கிய ‘திரு’தான் இதில் விஷாலை வைத்து கொஞ்சம் விளையாடியுள்ளார். பணக்காரர்களின் ‘விளையாட்டு’ தான் இந்தப் படத்தின் கரு. தங்களையே கடவுளாக நினைத்துக் கொண்டு மனிதர்களுடன் விளையாடும் இரண்டு வில்லன்கள்.அவர்களுடைய விளையாட்டை அவர்களுக்கு எப்படி திருப்பிக் கொடுக்கிறார் விஷால் என்பதுதான் கதை அழகான காடு… இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் மரங்களை வெட்டுபவர்களை முதல் காட்சியிலேயே புரண்டு புரண்டு அடிக்கிறார் விஷால்… இயற்கையின் காவலராக நடித்திருக்கிறார் போல என்று நினைத்தால் கடைசியில் புஸ்ஸ்ஸ்… என்றாகிவிட்டது படம். விஷால் வனக்காவலர் என்று நினைத்தால் கடைசியில் ஏமாந்து போக வேண்டியதுதான். விஷாலின் அப்பாதான் வனக்காவலர். அழகான வனத்தை சுற்றிக் காட்டும் கைடாக வருகிறார் விஷால். அவரை காதலிக்கும் சுனைனா இரண்டாவது காட்சிலேயே காதலை முறித்துக்கொண்டு பாங்காக் பறந்து விடுகிறார். காதலை முறிக்க சுனைனா சொல்லும் காரணம் தெரியுமா?… என்னோட ஹிப் சைஸ் தெரியுமா? செப்பல் சைஸ் தெரியுமா? இதெல்லாம் தெரியாதுல்ல அப்ப நாம காதலை ப்ரேக் பண்ணிக்கலாம் என்கிறார். இவ்வளவு தான் காரணம். இதெல்லாம் விஷாலுக்கு தெரியாது என்பதை தெரிந்து கொள்ள காதலி சுனைனாவிற்கு 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதுதான் கொடுமை. காதலி இருக்கும் போது அவரைப் பற்றி நினைக்காத விஷால் முறிந்து போன உடன்தான் அதிகம் நினைக்கிறார். பாங்காங்கில் இருந்து வரும் கூரியரில் காதலி சுனைனாவின் கடிதத்துடன் விமான டிக்கெட் வரவே உடனடியாக பாங்காக் செல்ல சென்னை வருகிறார். அங்கு விமான நிலையத்தில் ஒன்றுமே தெரியாத விஷாலுக்கு திரிஷா உதவிக்கு வருகிறார். பரபரக்கும் கதை பார்த்த உடனேயே தன்னுடைய காதலைப் பற்றியும் காதலியைப் பற்றியும் திரிஷாவிடம் பகிர்ந்து கொள்கிறார்! பாங்காங்கில் விஷால் இறங்கியதில் இருந்து ஒரே பரபர காட்சிகள்தான். அவரை கொல்ல ஒரு டீம் முயற்சிக்கிறது… விஷால் போகும் இடத்தில் எல்லாம் ராஜ மரியாதை. திடீரென சில நாளில் அந்த மரியாதை காணாமல் போகிறது… என்ன நடக்கிறது… என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இல்லாமல் தவித்துப் போகிறார் விஷால். அட அதுக்குள்ள இடைவேளை வந்திருச்சா என்று எண்ணத்தோன்றும் பரபர காட்சிகள். வில்லன்கள் அறிமுகம் வரைக்கும் நீடிக்கும் சஸ்பென்ஸ்.. என கண்ணாமூச்சி ஆடியிருக்கும் ‘திரு’ வை பாராட்டலாம். குழப்பிய இயக்குநர் ஆனால் படத்தில் ஆங்காங்கே சில குழப்பமான முடிச்சுகள்… பார்வையாளர்களை குழப்புகிறது. பாங்காங்கே நடுங்கும் பிரபல பணக்கார ஜோடி நண்பர்கள் சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவரும் கடைசியில் கார் விபத்தில் சிக்கி விஷாலிடம் மாட்டி உயிர்ப்பிச்சை கேட்கின்றனர். கிளைமாக்ஸ்தான் நெருடுகிறது. புதிதாய் ஏதாவது யோசித்திருக்கலாம். யுவன் சங்கர் ராஜா எங்கே? இசை ‘யுவன் சங்கர் ராஜா’ டைட்டிலில் பார்த்த ஞாபகம். ஆனால் ஒரு பாடல் கூட மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் மனிதர் பரவாயில்லை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு சபாஷ் ரகம். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடுவோம் என சொல்லும் விதமாக பாங்காங் காட்சிகளில் மிரட்டியுள்ளார். பல இடங்களில் கேமராவும், பின்னணி இசையும் போட்டி போடுகிறது. வசனத்திற்கு கைதட்டல் எஸ். ராமகிருஷ்ணனின் ரொம்ப பேசாத சின்ன சின்ன வசனங்கள் கைத்தட்டலை அள்ளுகிறது. ஒரு பெக் அடிக்க ஆரம்பிச்சா காதலி நினைவு வந்திடும்… அமெரிக்காவில அப்துல் கலாமை சோதனை போட்டா ஏன்னு கேட்க மாட்டீங்க… போன்ற வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறது. தியேட்டரில் பாதியில் யாரும் எழுந்து போனதாக தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை என்கின்றனர் ரசிகர்கள்.




Ring ring